தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பல்வேறு தரப்பு மக்களையும் வாட்டி வருகிறது. இதற்கிடையில், கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால்,  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. 

மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வும் நடைபெற்றது. இதில் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் தேர்வில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். 

e1

தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் ஆன்லைன் கல்வியும் தொடர்கிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இதேபோல் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேரடி எழுத்துத் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக உயர் கல்வித்துறையானது முக்கிய உத்தரவை இன்று பிறப்பித்திருக்கிறது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா பாதிப்பானது குறைய தொடங்கியிருப்பதால் முழுமையாக நேரடி தேர்வு முறை நடத்தப்படும் என்றும், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் இதே முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

நேரடி தேர்வானது அரசு வெளியிட்டிருக்கக்கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நடத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை வெளியிட்டிருக்கக்கூடிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

e2

இதற்கிடையில், பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
செமஸ்டர் தேர்வு, இண்டர்னல் தேர்வு, வைவா உள்ளிட்ட அனைத்தும் நேரடியாகவே நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்காக அரியர் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளின் போது அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான தேர்வு மையத்தை வரும் 18-ம் தேதிக்குள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் ஏதேனும் ஒரு மையம் ஒதுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.